அசோக தூண்கள்

அசோக மன்னன் தனது கட்டளைகளையும் போதனைகளையும் எழுதிக் இடங்களில் நாட்டிய தூண்கள் அசோக தூண்களெனப் பெயர் பெற்றன. முப்பது தூண்களுக்கு அதிகமான தூண்கள் இந்தியாவில் அமைக்கப்பட்டதென அறியப்படுகிறது. இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அசோக தூண்களுள் பபிர (வைசாலி), ராம்பூர்வ, லௌரிய நந்தநகர், ருமின்தய (லும்பினி), சங்களிஸ், சாரநாத், சாஞ்சி, திலிலி தோபுரா, தில்லி மிரட், நிகக்லிவா போன்ற இடங்களில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ள தூண்கள் கலைப் படைப்புக்களிடையே மிக முக்கியமானவை. மீதியாய் உள்ள தூண்களில் அசோக மன்னனினால் எழுதப்பட்ட தர்மபோதனைகளைக் காணமுடியும். இவ்வாறான பெரும்பாலான தூண்கள் அசோக மன்னனுடைய ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்டன. அவற்றில் புத்தசரிதைகளும் அவை சம்பந்தப்பட்ட விடயங்களும் முக்கியமானவை. இதன் மூலம் இத்தூண் நிர்மாணிப்புக்களிடையே அசோக மன்னரது எதிர்பார்ப்புக்கள் பலவற்றினை அறிந்து கொள்ள முடிகிறது.

(1) பௌத்த சமயத்தைப் பரப்புவதற்கான செய்திகளை அமைச்சர்களுக்கு அனுப்புதல்.
(2) புத்த பெருமானுடைய பிறப்பு முதல் பரிநிர்வாணமடையும் வரையிலான இடங்களை நினைவு கூர்தல்.
(3) துறவிகளின் கட்டுப்பாட்டுக்காக ஒழுக்கக் கட்டளைகளைப் பிறப்பித்தல்.

தூண்களின் வடிவங்களும் அவற்றின் அம்சங்களும்

அசோக தூண்களின் வடிவங்களின் தன்மையை ஆராய்ந்து பார்க்குமிடத்து அவற்றில் சிறப்பியல்புகள் காணப்படுவதை அறிய முடிகிறது. ஒட்டுமொத்தமாகக் கருதும்போது அசோக தூணின் உயரம் 30 – 45 அடிகளுக்குமிடைப்பட்டது. சூனார் எனப்படும் கபில நிறக் கற்களால் அமைத்து மெரு கூட்டப்பட்டுள்ளன. இவ்விரு பகுதிகளும் வெவ்வேறாகச் செய்யப்பட்டு இணைக்கப்பட்டுள்ளன. தூண்கள் நிலத்திலிருந்து மேல்நோக்கிச் செல்லும்போது ஒடுங்கிச் செல்லும் முறையாகவும் அடித்தளம் இல்லாமலும் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது நிலத்தில் நடப்பட்டுள்ளன. உச்சிப் பகுதியில் கலை அம்சங்களுடன் கூடிய மிருக வடிவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் தூணின் உச்சி இரண்டு பகுதிகளைக் கொண்டது. உச்சியின் தளமானது சதுரமாகவோ வட்டமாகவோ காணப்படும். இந்த உச்சியின் தளத்தில் மிருக வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன மிருக வடிவங்களாக யானை, குதிரை, எருது, சிங்கம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

இவ்வாறான தூண் நிர்மாணிப்பின்போது பல்வேறுபட்ட கலைப் பாரம்பரியங்கள் செல்வாக்குச் செலுத்தியுள்ளதென்ற கருத்து நிலவுகின்றது. பாரசீகம், கிரேக்கம், உரோமாபுரி ஆகிய நாடுகளுடன் ஏற்படுத்திக் கொண்ட உறவு காரணமாக இந்திய கலைப் பாரம்பரியம் வளர்ச்சி பெற்றதற்கான மூலாதாரங்கள் எழுத்து வடிவிலுள்ளன. இத்தூபிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள தாமரை, சிங்கம் போன்ற வடிவங்கள் எகிப்திய கலையம்சங்களிலும் காணப்படுகின்றன. காண்டார அல்லது மணி வடிவம் கொண்ட தூண்கள் பாரசீகத்தில் காணப்படுகின்றன. மிருக வடிவங்களை உயிரோட்டமான தன்மையுள்ள வடிவங்களாகக் காண்பிக்கும் பழக்கத்தை கிரேக்கர்களிடமிருந்தே பெற்றுள்ளனர் என்பது அறிஞர்களின் கருத்தாகும். மூலப் பொருள்களையும் தொழில் நுட்ப முறைகளையும் நோக்கும்போது உலகில் பல்வேறுபட்ட கலைப் பாரம்பரியங்களைச் சேர்ந்த தூண்களை விட சிலை வேறுபட்டுக் காணப்படுகின்றன. அவ்வாறு வேறுபட்டுக் காணப்படும் அம்சங்களாவன:

ஏனைய வகைத் தூண்கள் (பாரசீகத் தூண்கள்)அசோகத் தூண்கள்
– சில கற்குற்றிகளாலானது.
– தூணின் உடற்பகுதி விளிம்புகளுடன் கூடியது.
– கட்டடங்களுடன் இணைந்தவை.
– தூண்களின் உடற்பகுதி சமவிட்ட முடையதாகக் காணப்படல்.
– அடித்தளம் காணப்படல்.
– தனிக் கல்லாலானது.
– தூண் மேற்பரப்பு ஒப்பமானது.
– தனித்தனியாக நிலத்தில் நடப்பட்டுள்ளன.
– தூண்கள் கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும் பொழுது ஒடுங்கியதாகக் காணப்படல்.
– அடித்தளம் அற்றுக் காணப்படல்.

இவ்வாறு சிறப்பம்சங்கள் காரணமாக அசோகத் தூணில் வேறுபட்ட பாரம்பரிய வடிவங்களின் தழுவல் காணப்படவில்லை . அளவுப் பிரமாணம், கட்டடக்கலை, நுட்பமுறைகளுக்கு ஏற்ப இந்தியா விற்கு உரித்தான கலையம்சங்களே காணப்படுகின்றதென ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. குறிப்பாக மௌரிய காலத்தில் அசோகத் தூண்களில் கட்டடக் கலையம்சங்களை விட சிற்பக்கலை அம்சங்கள் கூடுதலான செல்வாக்குப் பெற்றிருக்கின்றதென்பது அறிஞர்களின் கருத்தாகும். நீண்டகால அனுபவங்களையும் திறன்களையும் காட்டி நிற்கும் இந்த ஆக்கங்கள் தனித்தனியாக நிமிர்ந்து நிற்குமாறு இந்திய பூமியில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையும் ஒரு சிறப்பம்சமாகும்.

கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் மௌரியக் காலத்தில் அசோக மன்னனால் நிறுவப்பட்டவற்றுள் பல தூண்கள் சிதைவடைந்து விட்டன. அவற்றில் இரண்டு தூண்கள் பாதுகாப்பாக உள்ளன. அவற்றில் ஒன்று ”கதீரா” தூணும் மற்றையது லௌரிய நந்தநகர் தூணுமாகும். கதீரா தூண் அளவில் பெரியதாகவும் உயரம் குறைந்ததாகவும் காணப்படுகின்றது. அதன் உச்சியில் முன்னம் கால்களை நேராக வைத்தவாறு இருக்கின்ற சிங்க உருவமொன்றும் காணப்படுகின்றது. ஐம்பது தொன் எடையுடைய இது அசோக மன்னனது ஆரம்பகால தூண்களுள் ஒன்று எனக் கருதப்படுகின்றது. பழமை வாய்ந்த இலட்சணங்களுடன் கூடிய இந்த நிர்மாணிப்புக்களில் ஒத்த பண்பு இலட்சணங்களை சங்கஸ்ஸ தூணிலும் காணக்கூடியதாக உள்ளது. தூணின் தலைப்பகுதியானது யானை உருவத் தினைக் கொண்டுள்ளது. இவற்றில் காணப்படும் குறைபாடுகளைச் சீரமைத்துச் செம்மைப்படுத்தப்பட்ட ஏனைய தூண்களான ராம்பூர்” லௌரிய நந்தநகர், சாரனாத் போன்றவை சான்று பகர்கின்றன. இவற்றோடு லும்பினி, சாஞ்சி, ருமன்தாய் ஆகிய தூண்களும் முக்கியமானவையாகக் கருதப்படு கின்றன.

ராம்பூர் தூண்கள்

ராம்பூர் பிரதேசத்தில் இருந்து கிடைக்கப் பெற்ற இரு தூண்களாகும். அசோக மன்னனுடைய ஆட்சியில் 27 ஆம் ஆண்டைச் சேர்ந்தது. தூண் ஒன்றின் உச்சியில் எருது உருவமும் மற்றையதில் சிங்க உருவமும் உள்ளன. இதில் திமிலுடனான எருது (ரிசபம்) வடிவம் தத்ரூபமாகவும் உயிரோட்டமாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. எருது உருவத்தினை வடிவமைக்கும் பொழுது அதனுடைய வடிவம், தசைகள் தொடர்பான நல்லறிவு கலைஞர்களிடம் காணப்பட்டுள்ள தோடு தத்ரூபமான தன்மை, இயற்கைத் தோற்றம், பலம் பொருந்திய உடற்றன்மை, இயக்கப் பண்புகளை வெளிப்படுத்துமாறும் அமைக்கப்பட்ட இவ்வுருவம் அமைதியான சுபாவத்தினைக் கொண்டுள்ளது. இவ்வடிவம் சிந்துவெளி நாகரிகத்திற்குரிய எருதுவின் கலைப்பண்புகளை நினைவூட்டுவதாக அமைந்துள்ளது. எருது உருவத்திற்குக் கீழே வட்ட வடிவத்தில் தளமொன்றுள்ளது அது போதிகையின் தட்டையான மேற்பகுதி (Abacus) எனப்படும்,

இப்பகுதியைச் சுற்றியுள்ள மேற்பரப்பு ரோசாப் பூக்களாலும் வேறு கோலங்களாலும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இதற்குக் கீழே தாமரைப் பூவொன்று கவிழ்த்து விடப்பட்ட வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. தூணும் தலையும் வெவ்வேறாகவுள்ள இதன் தண்டுப்பகுதியில் கல்வெட்டுக் காணப்படாமை ஒரு சிறப்பம்சமாகும். தற்போது இத்தூணின் மேற்பகுதி டில்லி நூதனசாலையில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளது.

லௌரியா நந்தநகர் தூண்

இத்தூணின் உச்சியில் சிங்க உருவம் காணப் படுகின்றது. இச்சிங்க உருவம் பின்னங்கால் களை மடித்து அமர்ந்திருக்கும் வடிவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளதோடு கம்பீரமான தோற்றத்தையும் புலப்படுத்துகின்றது. இப் போதிகையின் தட்டையான மேற்பகுதி, விலங்குருவம் ஆகியவற்றிற்கிடையே விகித சமமான தொடர்பு உள்ளது.

சாரானாத் தூண்

அசோகத் தூண்களிடையே இது முக்கியமானது. இத்தூண் மௌரிய காலத்தில் ஆக்கப்பட்ட உயர் கலைப்பண்புகளைக் கொண்ட ஒரு கலைப்படைப்பாகும். பல பாகங்களாக உடைந்த நிலையிலுள்ள மேற்பகுதி ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டதான நான்கு சிங்க உருவங்களைக் கொண்டது. இவ்வாறு இணைக்கப் பட்ட நான்கு சிங்க உருவங்களைக் கொண்ட தூணின் மேற்பகுதி யொன்று சாஞ்சியிலுள்ளது. இது பூரணப்பாட்டிலும் அமைப்பிலும் நேர்த்தியான தன்மையினைக் கொண்டுள்ளது. தூணின் தலைப் பகுதியுடன் விலங்குருவங்கள் பொருந்தியிருக்கும் தன்மை பூரணப் பாட்டினை எடுத்துக் காட்டுகின்றது. இச்சிங்க உருவங்களின் நரம்பு, தசை போன்றவற்றைக் கலைஞன் நுணுக்கமாக ஆராய்ந்து வெளிப்படுத்தியுள்ளான். இவ்விலங்குகளின் இயற்கைத் தோற்றம் உயர்வான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது சுதேசிய மரச்செதுக்கல் வேலைப்பாடுகளுக்குரித்தான சிறப்புமிக்க கலை யம்சத்தினைக் கொண்டுள்ளதாகவும் குறிப்பிடலாம்.

வட்டவடிவமான மேடையின் மீது இணைந்த சிங்க உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தட்டையான பகுதியில் (Abacus) யானை, குதிரை, எருது ஆகிய விலங்குகள் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. இவ்விலங்குகளுக்குக் கீழ் தர்மச்சக்கரம் காட்டப்பட்டுள்ளது. அப்பகுதியின் கீழே தாமரை மலரொன்று கவிழ்த்து விடப்பட்டது போன்ற வடிவில் காணப்படுகின்றது. பாரசீக நாட்டின் செல்வாக்கைத் தழுவியதாக இது காணப்படுகின்றது. இது ஹன்சக்கள் என்று அழைக்கப்படுகின்றது. சிங்க உருவத்தின் மேற்பகுதியில் இரண்டு அடி ஒன்பது அங்குல விட்டம் கொண்ட தர்மச்சக்கரம் ஒன்று இருந்துள்ளது.

இதில் உள்ள உருவங்கள் கலையம்சம் பொருந்தியதாகவும் புதுமைப்பாட்டுடனும் காணப்படுகின்றன. இத்தூணின் செதுக்கல்கள் புத்தபெருமான் முதன்முறையாக தர்மபோதனை செய்த இடத்தினை நினைவுகூரும் முகமாக அமைக்கப்பட்டுள்ளது. நான்கு திசைகளையும் நோக்கியவாறு சிங்க உருவங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவை புத்தபெருமான் நாற்திசையும் நோக்கித் தர்மபோதனை செய்த விடயத்தினை அடையாளப்படுத்துகின்றது. இத்தூணின் மேற்பகுதியில் செதுக்கப்பட்டுள்ள யானை, குதிரை, எருது போன்ற விலங்குகளும் நான்கு திசைகளைக் குறிப்பதாக வின்சன் ஸ்மித் கருத்துத் தெரிவித்துள்ளார். யானை உருவத்தினால் சித்தார்த்த குமாரனின் பிறப்பு அல்லது மகாயாதேவியின் கனவும் குதிரை உருவினால் இல்லறத்தைக் கைவிட்டுச் செல்லலும். சிங்க உருவினால் புத்தராதலும், எருது உருவத்தினால் சிறுபராயம் அல்லது ஏர்பூட்டு வைபவமும் காட்டப்படுவதாக ஆனந்த குருகே கூறுகின்றார்.

அத்துடன் நான்கு திசைகளிலுள்ள நான்கு சிங்க உருவங்களும் அசோக மன்னனுடைய ஆட்சி, பலம், செல்வச் செழிப்பு என்பனவற்றை குறிப்பிடுவதாகவும் கருதப்படுகிறது. அத்தூணின் மேற்பகுதி அமைப்பு தற்பொழுது இந்திய நாட்டின் அரச இலச்சினையாகப் பயன்படுத்தப்படுகின்றது.

error: Content is protected !!