அல்ட்ட மீரா (Alttamira )

ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள இந்தக் குகை கி.பி. 1879 இல் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு காணப்படும் ஓவியங்கள் கி.மு. 20, 000 காலத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றது. (மேல் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் அதாவது மேல் கற்காலம்) அலட்டமீரா ஒரு பெரிய குகைத் தொகுதியாகும். அது 300 மீற்றர் அகலம், 06 மீற்றர் உயரமுடையது. அதன் பிரவேச வாயில் சிறியதாயினும் உட்புறத்தில் வெவ்வேறு திசைகளில் பரம்பிச் செல்லும் இரண்டு குகைகளையும் ஒடுங்கிய நடைபாதையையும் கொண்டது. அவற்றுள் முதலாவது குகை 18 மீற்றர் நீளமும் 10 மீற்றர் அகலமும் 3.5 மீற்றர் உயரமுமுடையது. இங்கு உள்ள எல்லாக் குகைகளிலும் சுவர்களிலும் உட் கூரையிலும் முற்றுமுழுதாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.

குகை மாதிரியும் உள்ளக அமைப்புக்களும்

விடயப் பொருள்

அல்ட்டமீரா குகை ஓவியங்களின் விடயப் பொருள்களாக, பிராணி உருவங்கள், மானிட உருவங்கள், இனங்காணப்படாத பல்வேறு அடையாளங்கள், குறியீடுகள் போன்றவை காணப்படுகின்றன. இங்கு காணப்படும் மிருக உருவங்களில் மிகப் பிரபல்யமானவை வெவ்வேறு உடல்நிலைகளைக் காட்டும் பைசன் எருது உருவங்களாகும். வெவ்வேறு மெய்ந்நிலைகளில் படுத்துக்கிடக்கும் பைசன் எருது உருவங்கள், முக்காரமிடும் எருது உருவம் ஆகியன இவற்றுள் சிறப்பானவையாகும். இவை தவிர, குதிரை, ரைனோசிரஸ், மான் போன்ற பிராணி உருவங்களையும் காணமுடிகிறது. மனித உருவங்கள் அரிதாகவே உள்ளன.

மான்கள் கை அடையாளங்கள் மற்றும் பல்வேறு குறியீடுகள்

நுட்பமுறைகள்

அலட்டமீரா குகையினுள் உள்ள ஓவியப்படைப்புக்களுள் கோட்டு வரைதல்கள் (Line drawing). வர்ணந்தீட்டிய ஓவியங்கள் (Painting), கற்சுவரைக் கூரிய ஆயுதங்கொண்டு கீறி ( Engraving )ஆக்கிய உருவங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இக்குகைகளில் காணப்படும் மிகச் சிறப்பான ஆக்கம் அச்சுப்பதிக்கப்பட்ட கை அடையாளங்களாகும் (Hand prints).

மோடியும் கலைத்துவப் பண்புகளும்

அல்ட்டமீரா குகை ஓவியங்களில் வர்ணந்தயாரித்தல், வர்ணங்களைக் கையாளல், கோடு வரைதல், முழுமைப்பாடு, அளவுப்பிரமாணத்தன்மை இயல்பான வகையில் பிராணிகளின் உடல் நிலைகளைக் காட்டல், பிராணிகளின் உயிரோட்டமான தன்மை ஆகிய பண்புகளைக் காண முடிகின்றது.

குகைச் சுவர்களில் பிராணி உருவங்களை ஆக்குவதில் சிறப்பான திறனைக் கொண்டிருந்தமை இந்த ஓவியங்களைக் கற்றாய்வதன் மூலம் தெளிவாகின்றது. இப்பிராணி உருவங்கள் தனித்தனியாகவும் கூட்டமாகவும் வரையப்பட்டுள்ளன. மேலும் கல்மேற்பரப்பின் தன்மைக்கேற்ப, பிராணி உருவங்கள் இடப்படுத்தப்பட்டுள்ளமையையும் காணமுடிகின்றது. கல் மேற்பரப்பின் வடிவத்துக்கு ஏற்ற வகையில் பிராணியின் மெய்ந்நிலையைக் காட்டுவதிலும் இயல்பான தன்மையை வெளிக்காட்டுவதிலும் அல்ட்டமீரா ஓவியர் கொண்டிருந்த திறமையை இங்கு தெள்ளத்தெளிவாகக் காணமுடிகிறது.

ற்சுவரைக் கோடுகளாகக் குடைந்து ஆக்கிய பிராணி உருவம் (Engraving)

ஓவியம் வரைவதற்காகக் கையாளப்பட்டுள்ள பிரதானமான முறை, கோடுகளைப் பயன்படுத்தி பிராணி உருவத்தை வரைந்து அதனுள் முழுமையாக வர்ணந்தீட்டுவதாகும். விரல்களால் நிறந்தீட்டல், வாயினுள் அல்லது குடைவான எலும்புத்துண்டுகளினுள் சாயம் நிரப்பி அதனை உருவத்தின் மீது தெளிக்கும் அல்லது சிவிறும் முறை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகின்றது. பெரும்பாலான ஓவியங்களில் வர்ணங்கள் தொட்டம் தொட்டமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதும் வர்ணச் சேர்மானமும் பிராணிகளின் இயல்பான வர்ணங்கள் வெளிப்படுத்தப் பட்டிருப்பதும் தெளிவாகின்றது. சில பைசன் எருதுகளின் இயல்பான நிறமாகிய சிவப்பு நிறமும் கறுப்பு நிறமும் தெளிவாகத் தொட்டம் தொட்டமாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு சில பைசன் எருது உருவங்களினுள் இந்த இரண்டு நிறங்களையும் கலந்து முப்பரிமாண இயல்புகள் வெளிப்பட்டப்பட்டுள்ளமையையும் பெரிதும் காணமுடிகின்றது. மேலும் பிராணிகளின் தசைகளின் வலிமையும் உடல் வலிமையும் வர்ணங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டுள்ள சந்தர்ப்பங்களையும் காணமுடிகின்றது.

அல்ட்டமீரா குகை ஓவியங்களில் காணப்படும் சிறப்பான சில சிறப்பான சில இயல்புகளும் உள்ளன. பிராணி உருவங்களில் தீட்டப்பட்டுள்ள நிறங்கள் அவற்றுள் முக்கியமான ஓர் இயல்பாகும். ஒவ்வொரு பிராணி உருவத்திலும் மூன்று நிறங்களுக்கு மேல் பயன்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இளம் நிறம் தொடக்கம் கடுமையான நிறம் வரையிலான நிறங்களைப் பரப்பியிருத்தலையும் தெளிவாகக் காணமுடிகின்றது. அதன் மூலம் உருவத்துக்கு முப்பரிமான இயல்பு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு உருவத்தையும் சுற்றிவர கறுப்பு நிறத்தில் வெளிக்கோடு இடப்பட்டிருத்தல் இந்த ஓவியங்களின் மற்றுமொரு சிறப்பியல்பாகும். கோட்டைப்பயன்படுத்தி பிராணி உருவங்களில் கண்கள், காதுகள் வால், முதுகில் உள்ள நீண்டு வளர்ந்த மயிர்கள் போன்றவை விரிவாகக் காட்டப்பட்டுள்ளன அதற்காகப் பயன்படுத்தியுள்ள கோடுகளின் கருத்து வெளிப்பாட்டுப் பண்பு மிகக் காத்திரமானது அக்கோடுகள் மூலம் பிராணி உருவம் உயிரூட்டத்தைப் பெற்றுள்ளது. மேலும் பிராணிகளின் சரியான உடல்நிலைகளையும் அளவுப்பிரமாணத்தையும் காட்டும் திறனும் நன்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வரையப்பட்டுள்ள பெரும்பாலான உருவங்களில் பிராணிகளின் சரியான உடல்நிலைகளும் முப்பரிமாண இயல்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிராணியையும் மிகத் தெளிவாக இனங்காணத்தக்க வகையில் அவற்றின் இயல்புகள் விரிவாகக் காட்டப்பட்டுள்ளன. ஓர் உருவத்தின் பின்னர் மற்றுமோர் உருவத்தைக் காட்டுதல், பின்னங்கால்களைக் காட்டுதல் ஆகியவற்றின்போது கட்புல அவதானிப்புக்குக் கூடுதலான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

error: Content is protected !!