சிகிரியா ஓவியங்கள்

  • மாபெரும் கலைக்கூடமான சிகிரியா மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்துக்குரிய இனாமலு கோரளையில் அமைந்துள்ளது.
  • கி.பி. 5ம் நூற்றாண்டில் அநுராதபுர கால தாதுசேன மன்னனின் மகனான காசியப்பன் மன்னனால் கட்டப்பட்டதாகும்.
  • இலங்கையின் சித்திரக் கலை வரலாற்றில் செந்நெறிப் பண்புகளை இவ் ஓவியங்கள் கொண்டுள்ளன.
  • ஆசியாவில் உள்ள தொல்பொருள் முக்கியத்துவமுள்ள ஸ்தானங்களில் ஒன்றான இது ஓர் உலக மரபுரிமையாக உள்ளது.
  • இங்குள்ள கட்டிட கலை அமைப்புக்களிடையே வில்வளைவு, படிவரிசை, அகழி, குளம் என்பனவற்றைக் கொண்ட கற் பூங்கா சிறப்பானதாகும்.
  • சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் உள்ள சிங்கப் பாதங்கள், கண்ணாடிச் சுவர், குன்றின் உச்சியில் உள்ள அரசமாளிகை இடிபாடுகள் போன்றவை கட்டடக் கலைத்துறை முக்கியத்துவமுள்ள அம்சங்களாகும்.

சிகிரியா மலை

சிங்க பாதம் கொண்ட நுழைவாயில்
குன்றின் உச்சி
பளிங்குச் சுவர் / கண்ணாடிச் சுவர்
பளிங்குச் சுவர் / கண்ணாடிச் சுவர்

சிகிரியா ஓவியங்கள்

  • சிகிரியாக் குன்றின் மேற்குப்புற குடைவுகளில் உள்ள பெண் உருவங்களே சிகிரியா ஓவியங்களாகப் பிரபல்யமடைந்துள்ளன.
  • சிகிரியாவில் மங்கையர் உருவங்கள் ஏறத்தாழ 500 வரையப்பட்டிருந்த தாக சிகிரியா சுவர்க் கவிதைகள் கூறினாலும் தற்போது ஏறத்தாழ இருபத்தி இரண்டு ஓவியங்களே மீதியாக உள்ளன. அதிலும் முழுமையாக அமைந்த ஓவியங்கள் ஒரு சில மட்டுமே இருக்கின்றன.
  • சிகிரியாக் குன்றின் மேற்குப்புறத்தில் குடைவுகளுக்குள்ளேயும் அடிவாரத்தில் உள்ள குகைகளிலும் இவ்வாறான ஓவியங்கள் உள்ளன.
  • ஓவியங்களை வரையப் பொருத்தமான விதத்தில் சாந்து பூசி கற்பாறை ஒப்பமாக்கப் பட்டுள்ளது.
  • அதற்காக வைக்கோல், உமி, களிமண், தாவர நார் வகைகள், தாவர பசை (பிசின்) சுண்ணாம்பு ஆகியன பயன்படுத்தி சாந்துக் கலவை தயாரிக்கப்பட்டது. கரடுமுரடான மேற்பரப்பைக் கொண்ட கற்பாறை மீது சாந்து பூசி ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
  • சாந்து உலர முன் ஓவியங்கள் வரையப்பட்டதாக நம்பப்படுகிறது. அந்நுட்ப முறை பிரெஸ்கோ புவனோ என அழைக்கப்படுகிறது. இந்நுட்ப முறையைத் தவிர டெம்பரா அல்லது உலர்ந்த சாந்து மீது பிரெஸ்கோ சிகோ முறை உபயோகிக்கப்பட்டுள்ளதென அறிஞர்கள் கூறுகின்றனர். சிலர் உலர் சாந்து மீது வரையப்பட்டதென கருத்து வெளியிட்டுள்ளனர்.
  • சிகிரியா ஓவியங்களின் கலைப்பாணி பற்றிய கருத்துகளை வழங்கிய அறிஞர்கள் இது இந்திய அஜந்தா சித்திரப் பாரம்பரியத்தைச் சேர்ந்தது எனக் கூறுகின்றனர். பெரும்பாலும் அஜந்தா ‘அப்சரா’ வடிவங்களுக்கு சமமான இருள் வர்ணச் சாயல், ஒளிப்பான வர்ணச் சாயல் பெண் வடிவங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பு:

⊕  பிரெஸ்கோ புவனோ : ஈரச் சுண்ணாம்புச்சாந்து மீது கனிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி வரையும் முறை.

⊕  பிரெஸ்கோ சிக்கோ : உலர் சுண்ணாம்புச்சாந்து மீது கனிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களைப் பயன்படுத்தி வரையும் முறை.

⊕  டெம்பரா: உலர் சாந்து மீது பிணைப்பு ஊடகத்துடன் (பசையுடன்) கலந்து தயாரித்த வர்ணங்களைப் பயன்படுத்தி வரையும் முறை.

சிகிரியா ஓவியங்களின் கலைப் பண்புகள்

  • மங்கையர்களே சிகிரியா ஓவியங்களின் தொனிப்பொருளாக அமைகின்றனர்.
  • இவை உடலின் மேற்பகுதி மட்டும் தெரியும் உருவங்களாக உள்ளன.
  • இவ்வுருவங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்ட தன்மையை கொண்டிருக்கின்றன. இதன் மூலம் ஓவியரின் தேர்ச்சி , நுட்ப முறை என்பன பிரதிபலிக்கின்றன.
  • இம் மங்கையரின் உருவங்கள் தனித்தனியாகவும், சோடியாகவும் ஒழுங்கிணைத்து வரையப்பட்டுள்ளன.
  • பெண்களின் அரைக்குக் கீழே மேகக் கூட்டங்களால் மறைக்கப்பட்ட தன்மையில் இவை வரையப்பட்டுள்ளன.
  • எல்லா உருவங்களும் முழுவதுமாக அல்லது சற்று சாய்வாக திரும்பிய நிலையில் உள்ளவாறு சித்தரிக்கப்பட்டுள்ளன. நேரே பார்த்துக் கொண்டு இருக்கும் விதத்தில் எவ் உருவமும் வரையப்படவில்லை.
  • பல வடிவப் பூத்தட்டுகள், பூங்கொத்துகள் ஏந்திய மங்கையர்களையே உருவங்கள் சித்தரிக்கின்றன. அலங்கார ஆடை அணிகலன்கள் அணியப்பட்டு இருக்கும் இவர்களின் கைகள், தலை என்பவற்றை அலங்கரிப்பதற்காக தாமரை, அலரி, நீல அல்லி போன்ற மலர்களை ஓவியர் உபயோகித்துள்ளார்.
  • மஞ்சள், கபில நிறம், சிவப்பு, பச்சை, கறுப்பு வர்ணங்களை உபயோகித்து முப்பரிமாணத் தன்மையை வெளிப்படுத்தியுள்ளார்.
  • ஓவியங்களை வர்ணம் தீட்ட சிவப்பு, பச்சை, மஞ்சள் வர்ணங்களை பிரதானமாக உபயோகித்துள்ளார். மங்கையரின் உடலை மஞ்சள், சிவப்பு வர்ணங்களால் வர்ணம் தீட்டியுள்ளார். இருளான மங்கையர்களை நீல நிறத்தைக் கொண்ட இருளான பச்சை வர்ணம் உபயோகித்து வரைந்துள்ளார்.
  • உருவங்களைச் சுற்றி உயிர்த்துடிப்புள்ள இரேகைகளை சந்தத்துடன் வரைந்துள்ளார். வேகம், அளவு என்பன சிறு இரேகைகள் மூலம் காட்டப்பட்டுள்ளன. தடிப்பமான சிறு இரேகைகள் முப்பரிமாணத் தன்மையை தோற்றுவிக்கின்றன.

சிகிரியா ஓவியங்கள் பற்றிய அறிஞர்களின் முரண்பாடான கருத்துகள்:

பேராசிரியர் செனரத் பரணவித்தான

சிகிரியா குபேரரின் குபேரபுரியை சித்தரிக்கின்றது. இவ்வுருவங்கள் குபேரரின் மகள்மார்களான மேகலதா (மேகம்), விஜ்யுலதா (மின்னல்) ஆகியோரைக் குறிப்பதாகவும், நீல நிற மங்கையர்கள் மேகலதா ஆவதோடு பொன்னிறத்தில் உள்ள மங்கையர்கள் விஜ்யுலதா (மின்னல்) ஆவார்கள் எனவும் கூறியுள்ளார். சிகிரியா ஓவியங்கள் தொடர்பான பல முரண்பாடான கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் கூடுதலாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளவை இவரது கருத்துகளேயாகும்.

C. P. பெல்

காசியப்ப மன்னனின் அரசிகளும் பணியாளர்களும் சித்தரிக்கப்பட்டுள்ளதெனக் கூறுகிறார். H.C.P. பெல் அவர்களின் கருத்துப்படி அரசகுல மாதர்கள் பொன்னிறத்திலும் பரிவாரப் பெண்கள் நீல நிறத்திலும் காட்டப்பட்டுள்ளனர். அவர்கள் பிதுரங்கல விகாரையை வணங்க செல்லத் தயாராகிய நிலையில் கைகளில் மலர் ஏந்திய வண்ணம் இருப்பதாகக் காட்டியிருக்கிறார்.

ஆனந்த குமாரசுவாமி

இம் மங்கையர்கள் தெவ கன்னியர்கள் (அப்சரா ) என்பதை கூறுகிறார். காரணம் இதில் உள்ள எல்லாக் கன்னியர்களும் இடையின் கீழ்ப்பகுதி முகிற்கூட்டங்களால் மூடி இருக்கும் தன்மையில் காணப்படுவதும், மலர்களை தூவும் மலரேந்திய கன்னியர்களை காரணமாகக் காட்டி இதனைக் குறிப்பிடுகின்றார்.

பயிற்சி வினாக்கள்

1. சிகிரியாக் குன்று எம் மாகாணத்தில் காணப்படுகின்றது?
2. சிகிரியா ஓவியங்கள் எத்தனையாம் நூற்றாண்டுக்குரியது?
3. சிகிரியா ஓவியங்கள் எக்காலப்பகுதிக்குரியது?
4. சிகிரியா கலக்கூடம் எம்மன்னன் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டது?
5. இங்கு காணப்படும் கட்டடக்கலை அம்சங்கள் சிலவற்றக் குறிப்பிடுக?
6. சிகிரியா ஓவியங்களின் கருப்பொருள் யாது?
7. இங்கு எத்தனை பெண் உருவங்கள் வரையப்பட்டிருந்ததாக நம்பப்படுகின்றது? தற்போது எத்தனை எஞ்சியுள்ளது?
8. சிகிரியா ஓவியங்கள் இந்தியாவின் எவ் ஓவியங்களுடன் ஒப்பிடப்படுகின்றன?
9. சிகிரியா ஓவியப் பண்புகள் ஐந்து தருக.

பின்வரும் விடயங்களை விளக்குக.
1. பிரெஸ்கோ புவனோ :
2. பிரெஸ்கோ சிக்கோ :
3. டெம்பரா :

சிகிரியா ஓவியங்கள் பற்றி பின்வரும் அறிஞர்கள் கூறிய கருத்துக்களைத் தருக.
1. பேராசிரியர் செனரத் பரணவித்தான :
2. ஆனந்த குமாரசுவாமி :
3. C.P. பெல் :

கீழே தரப்பட்டுள்ள கலை ஆக்கத்தை இனங்கண்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள உப தலைப்புகளுக்கேற்ப கருத்துள்ள ஐந்து வாக்கியங்கள் எழுதுக.

1. இனங்காண்க : ………………………………..
2. நுட்பமுறை : …………………………………..
3. இரேகைப் பயன்பாடு : ………………..
4. வர்ணப் பயன்பாடு : …………………….
5. நுட்பத்திறன் : …………………………………
6. ஆய்வாளர் கூற்று : ……………………..

error: Content is protected !!