சிகிரியா

மத்திய மாகாணத்திலுள்ள மாத்தளை மாவட்டத்தில் இனாமலுவக் கோரளையில் சிகிரியாச் சமவெளியில் அமைந்த ஒரு நிலப்பகுதியில் இயற்கையாக அமைந்த கற்குன்று சார்ந்ததாகக் கட்டியெழுப்பப்பட்ட இராசதானி ஆகும். இதன் நுழைவாயில் சிங்கத்தின் உருவத்தைக் கொண்டிருப்பதால் இந்நகர் சிகிரியா எனப்படுகிறது. முற்காலத்தில் இது சிககிரி, சிங்ககிரி எனும் பெயர்களாலும் அழைக்கப்பட்டுள்ளது.

சிகிரியா ஆசியாவிலுள்ள தொல்பொருளியல் சார்ந்த இடங்களில் ஒன்று என்பதுடன், உலக அருஞ் செல்வமாக இது 1982 இல் பிரகடனப்படுத்தப்பட்டது. சிகிரியா காசியப்ப மன்னனின் (கி.பி. 477-495) நிர்மாணிப்பாகும். கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்குரிய காலத்தில் அரண்மனை வாசஸ்தலமாகவும் கோட்டையாகவும் கட்டியெழுப்பப்பட்டபோதிலும் சிகிரியாவின் வரலாறு அதனை விடவும் பழைமை வாய்ந்தது என்பதற்கு சிகிரியாக் குன்றின் அடிவாரத்தில் உள்ள கற்குகைகளில் காணப்படும். கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் இருந்து இரண்டாம் நூற்றாண்டு வரையான காலத்துக்குரிய பிராமி அட்சரங்கள் சான்று பகர்கின்றன. இக்குகைகள் அக்காலத்தில் வாழ்ந்த வனவாசம் செய்த பௌத்த மதக் குருக்களின் வாசஸ்தலங்களென இனங்காணப்பட்டுள்ளன. அத்துடன் காசியப்ப மன்னனுக்குப் பிற்பட்ட காலப்பகுதியில் இந்த இடம் மீண்டும் ஒரு பௌத்த மத வழிபாட்டிடமாகக் காணப்பட்டமை உறுதியாகி உள்ளது. கி.பி. 5 ஆம் நூற்றாண்டு முதலே சிகிரியா தொடர்பாக முதன் முதலில் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளின்போது வெளியிடப்பட்ட சிகிரியாவின் தகவல்களுக்கமைய காசியப்ப மன்னன் மிகச் சிறந்த கலையார்வமுள்ள அரசன் என்பது தெளிவாகிறது. காடு மண்டிக் கிடந்த சிகிரியா திரும்பவும் பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் எழுத்து மூலம் பதிவுக்கு உள்ளாகியது. ஃபோட்ஸ் இனது மீளக் கண்டுபிடிப்பே அதற்கு ஏதுவாகியது. சிகிரியாவைப் பற்றி பல சந்தர்ப்பங்களில் ஆங்கிலேயர்களால் அறிக்கையிடப்பட்ட போதும் முதன்முதலாக இவ்விடத்தை அகழ்விடமாக்கி அதனுடைய சிறப்புக்களை எச். சி. பி. பெல் அவர்களே வெளிப்படுத்தினார்.

ஏறத்தாழ 600 அடி உயரமான குன்றின் உச்சியில் அரண்மனைப் பூங்கா அமைந்திருந்தது. குன்றின் உச்சியில் அரண்மனைப் பூங்காவில் அரசனின் அரண்மனை, அரசுடன் தொடர்பு பட்ட மனைகள், குளங்கள், காவல் அரண்கள் என்பனவும் காணப்படுகின்றன. குன்றின் கீழ்ப்பகுதியில் அதனைச் சூழ கற்பூங்கா, நீர்ப்பூங்கா, படிவரிசைப்பூங்கா என 3 பிரிவுகள் உள்ளன. ஒட்டுமொத்தமாக இது 4 படிவரிசைகளைக் கொண்டுள்ளது. கற்பூங்காவின் சிறப்பு என்னவெனின் இயற்கையாக அமைந்த பெரிய, சிறிய குன்றுகளை உபயோகித்து குன்றின் மீது ஆசனங்களும் அரசவை மண்டபங்களும் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகும். அத்துடன் சில இடங்களில் இயற்கையாக அமைந்த கற்பாறைகளே வில்வளைவான வாயில்களாக அமைந்திருக்கின்றன. நீர்ப் பூங்காவுக்குள் குளங்கள், அகழிகள், நீர் தூவிகள் என்பன அமைந்திருக்கின்றன. சிகிரியாவைச் சுற்றி இரு அகழிகளும் பெருஞ்சுவர்களும் காணப்படுகின்றன. மேற்கு, வடக்குப் பகுதிகளில் உள்ள அகழிகளை இன்றும் காணக்கூடியதாக இருக்கின்றது. குன்றை நோக்கி வரும் பாதையில் வலப்பக்கமாக குளங்களும் நீர்ப் பூங்காவொன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

படிவரிசைகள்
படிவரிசைகள்
படிவரிசைகள்
குன்றின்மேல் மாளிகையும் ஏனைய ஆக்கங்களும்
நீர்ப்பூங்கா
குளங்கள்
நீர்த்தூவி
நீர் அகழி

சிகிரியாவில் காணப்படும் சிறப்புமிக்க இன்னொரு கட்டட நிர்மாணிப்பு கண்ணாடிச் சுவராகும். கண்ணாடிச் சுவரில் உள்ள எழுத்துருக்கள் இலங்கையின் எழுத்தாக்கத் துறை வரலாற்றின் சிறப்பு நிர்மாணிப்பாகிறது. இவ்வெழுத்துருக்கள் சிகிரியா பற்றிய பல தகவல்களை வெளிப்படுத்துகின்றன. 500 பெண்களின் உருவங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளதாகவும் இவ்வெழுத்துருக்களுள் ஒன்று கூறுகின்றது.

கண்ணாடிச் சுவர்

குன்றின் மேற்பகுதியில் குழிவுவடிவில் உட்குடையப்பட்ட தளத்தில் காணப்படும் ஓவியங்களே புகழ் பெற்றவையாகின்றன. இக்குன்றின் உட்குழிந்த தோற்றம் ”குகை” என அழைக்கப் படுகின்றது, பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்காவின் கூற்றுப்படி தற்போது மங்கையர்களின் 22 ஓவியங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. குழிவு A யில் 5 உருவங்களும், குழிவு B யில் 17 உருவங்களும் உள்ளன. இவற்றுள் தனித்தனிப் பெண் உருவங்களும், சோடிசோடியான பெண் உருவங்களும் உள்ளன.

A குழிவு மற்றும் B குழிவு
குழிவு A யில் காணப்படும் உருவங்கள்
குழிவு B யில் காணப்படும் உருவங்கள்

சிகிரியாக் குன்றின் மேற்பகுதியில் மேற்குத் தளத்தில் காணப்படும் ஓவியங்களோடு சிகிரியாக் குன்றின் கீழ்ப்பகுதியில் உள்ள சில குகைகளிலும் ஓவியப் பகுதிகளைக் காணக்கூடியதாக இருக்கின்றது. (தெரணியகல குகை) 7 ஆம் குகை, நாகபடக்குகை 9, ஆசனக் குகை | என்பவை இவற்றுள் அடங்கும். ஏழாம் குகையின் (தெரணியகல குகை) உட்கூரை மீது சோடிசோடியாக முழு உடலுடன் கூடிய பெண் உருவக் கூட்டத்தின் பகுதிகளும், நாகபடக்குகையின் உட்கூரையில் தாமரை முத்திரைகளும், அலங்கார வேலைப்பாடுகளைக் கொண்ட பட்டிகளும், ஆசனக் குகையில் சிதைவடைந்துள்ள மனித உருவங்கள் இரண்டும் உள்ளன. இவற்றின் பண்புகளை நோக்கும்போது சிகிரியா ஓவியங்கள் பல காலகட்டங்களுக்கு உரியவை எனக் கூறலாம். பாரிய குன்றின்மீது வரையப்பட்ட ஓவியங்கள் 5 ஆம் காலத்துக்குரியனவெனக் கருதப்படுகின்றது.

ஊடகமும் நுட்பமுறையும்

சிகிரியாச் சுவரோவியங்கள் தொடர்பான தொழினுட்பம் பற்றிய பல்வேறு கருத்துக்கள் உள்ளன. அவை அடிப்படையான நான்கு படைகளைக் கொண்டவை என்பது மிக அண்மைக் காலக் கருத்தாகும். அதன் முதலாவது படை (அடித்தளப் படை) பெரிய துணிக்கைகளாலான களிச்சாந்து ஆகும். இரண்டாவது படை (இடைப்படை) சிறிய துணிக்கை களாலான களிப்படையாகும். மூன்றாவது படை (மேற்படை) உவர் சுண்ணாம்புச் சாந்து ஆகும். நான்காவது படை வர்ணப்படை அதாவது சிகிரியாப் பெண் உருவங்களாலான படை ஆகும்.

பழைமையான கலைஞர்கள் ஓவியம் வரையும் போது பல நுட்ப முறைகளைப் பயன்படுத்தியுள்ளதாகத் தெரிகின்றது.

  1. Buon fresco – Tresco boun (Truc fresco) பிரெஸ்கோ புவனோ ஈரச் சாந்தைப் பூசுதல், சாந்தைப் பூசி அது உலர முன்பே ஓவியங்கள் வரையப்படும். கனிப்பொருட்களாலான வர்ணங்கள் இங்கே உபயோகிக்கப்படும்.
  2. Fresco secco (பிரெஸ்கோ சிகோ) உலர்ந்த சாந்து மீது ஓவியங்கள் வரையப்படும். கனிப்பொருட்களாலான வர்ணங்கள் உபயோகிக்கப்படும்.
  3. Tempara (ரெம்பரா) உலர்ந்த சாந்தின் மீது இறுகப் பற்றும் ஒரு ஊடகத்துடன் (பிசின்) வர்ணங்களைக் கலந்து ஓவியங்கள் வரையப்படும்.

சிகிரியா ஓவியங்களில் காணப்படும் சாந்து, வர்ணக்கலவை என்பன நீண்டகாலப் பாவனையைக் கருதி அமைக்கப்பட்டதால் அவை இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கையாகச் சிதைவடையும் தன்மை குறைவடைந்துள்ளது. இருந்தபோதும் 1967 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பாதகன் ஒருவனால் சிகிரியா ஓவியங்கள் மீது தார் பூசப்பட்டு அவை சேதப்படுத்தப்பட்டன. பின்பு அவ்வோவியங்கள் மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வரப்பட்டன. இதற்காக உரோமாபுரியில் அமைந்துள்ள பண்பாட்டு கலாசார ஆவணங்களைக் கற்றறியும் மற்றும் பாதுகாக்கப்படும் சர்வதேச நிலையத்தின் லுசியானோ மரன்சி என்பவரை அழைக்க நேரிட்டது.

மரபு / கலைப்பாணி

சிகிரியா ஓவியங்கள் தொல்சீர் கலை மரபுக்குரிய கலைப்பாணியின் இயல்புகளைக் கொண்டுள்ளன என்று பேராசிரியர் சேனக்க பண்டாரநாயக்க கூறியுள்ளார். செந்நெறிக் கலை இயல்புகள் என்பது சிறப்புத் தன்மைக்குட்படுத்தல் இயற்கைத்தன்மை, மென்மையான வர்ணந் தீட்டல் மற்றும் திட்டவட்டமான சட்டதிட்டக் கோவைக்கு அமைவாக விடயப் பொருளை எடுத்துக்காட்டல் ஆகிய விடயங்களாகும். அத்துடன் ஒத்த தனி வர்ணச் சாயல்களால் வர்ணம் தீட்டப்பட்டிருப்பது தொல்சீர்க் கலையின் சிறப்பியல்பாகும்.

சிகிரியா ஓவியங்களின் பாணி மற்றும் பெண்கள் தொடர்பாக நீண்டகாலமாகப் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எச். சீ. பி. மெல், ஆனந்த குமாரசுவாமி ஆகியோர் சிகிரியா ஓவிய மோடியானது அஜந்தா மத்திய இந்திய பள்ளி அல்லது அதனுடன் தொடர்புடைய பாக் (Bagh) அல்லது தென்னிந்திய சிந்தனை வாசல்’ பள்ளியின் ஒரு தொடர்ச்சியாகும் எனக் கூறியுள்ளனர். சிகிரிய ஓவியப்பாணி மூலம் தெற்காசியக் கலையின் பௌத்த குருகுலமொன்று வெளிப்படுத்தப்பட்டுள்ளது என பேர்சி பிரவுன் கூறுகிறார். சிகிரியா ஓவியப்பாணி மூலம் இலங்கைப் பாரம்பரியக் கலையின் ஆரம்ப காலப் பண்புகள் சிகிரிய ஓவியங்களால் வெளிக்காட்டப்படுகின்றன என பென்சமின் ரோலன்ட் (Benjamin Rowland) கூறுகின்றார். ரோலன்ட் இனது கருத்துத் தெரிவிக்கின்றது. சில ஆண்டுகளின் பின்னர், பிலிப் ரவுசன் (Philip Rwson) என்பார் அஜந்தா ஓவியங்கள் மற்றும் ஏனைய இந்திய உபகண்ட மரபுகளை விட சிகிரியா ஓவியங்கள் வேறுபட்டமை எனக் கருத்துத் தெரிவித்துள்ளார். இக்கருத்தின் மீதமைந்து பிற்கால இலங்கைக் கலை வரலாற்றாசிரியர்களான நந்ததேவ விஜேசேக்கர, சிரி குணசிங்க, அல்பர்ட் தர்மசிரி போன்றோர் சிகிரியா ஓவியங்கள் பரந்த தென்னிந்திய ஓவியக் கலை மரபுகள் மீதமைந்த இலங்கையின் வெளிப்பாடாகும் எனக் கூறியுள்ளார். இந்த எல்லாக் கருத்துக்களையும் அடியொற்றி, சிகிரியா அழிக்கப்படாமல் ஓவியங்கள் இலங்கையின் ஓவியப் பள்ளியை விட பழைமையான மற்றும் இறவாது காணப்படுகின்ற ஓவியங்களுக்கான சிறந்த உதாரணமாகும் என சேனக்க பண்டாரநாயக்க கூறுகின்றார்.

வெளித் தளம் மீது உருவப் பயன்பாடு

சிகிரியா ஓவியங்கள் அனைத்துமே மங்கையர் உருவங்களாகும். சிகிரியா கண்ணாடிச் சுவரில் எழுதப்பட்டுள்ள எழுத்துருக்களுக்கமைய இம்மங்கையர்கள் பொன் நிற, நீல நிற மங்கையர் என விபரிக்கப்பட்டுள்ளனர். சிகிரியாவின் ஓவியக் கலைஞன் குழிவு A யிலும், குழிவு B யிலும் குன்றின் தளம் மீது மங்கையர்களைத் தனித்தனியாகவும் சோடிகளாகவும் வரைந்துள்ளார்.

சிகிரியா ஓவியங்களின் திட்டமிடலை நோக்கும்போது, பிரதான உருவம் தவிர்ந்த வேறு பின்னணிக் காட்சிகள் பயன்படுத்தப்பட்டமையைக் காண முடிவதில்லை. எனினும் குன்றின் தளத்தினது தன்மையை நன்கு விளங்கிப் பொருத்தமானவாறு பெண்களின் உருவங்கள் தனியாகவும் சோடிகளாகவும் வரையப்பட்டுள்ளன. பெண் உருவங்களின் இடுப்புக்கு மேற்பட்ட பகுதி மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளதோடு இடுப்புக்குக் கீழ்பட்ட பகுதி மேகங்களால் மறைக்கப்பட்டுள்ளது போன்று வரையப்பட்டுள்ளது. இப்பெண் உருவங்கள் வடக்கை நோக்கித் திரும்பியிருப்பதைப் போல் சித்திரிக்கப்பட்டுள்ளன. இவ்வுருவங்களில் பிரதானமான இரண்டு உடல்நிலை வகைகளை இனங்காண முடிகின்றது. ஒரு பக்கம் திரும்பியிருக்கும் உருவங்களும் முக்கால் பங்கு தெரியத்தக்கதாக உள்ள உருவங்களுமே அவையாகும். பெரும்பாலான உருவங்கள் பூத்தட்டை அல்லது பூங்கொத்தை கையில் ஏந்திய வண்ணம் உள்ளன.

சிகிரியா ஓவியங்களில் காணப்படும் பெண் உருவங்கள் பலவற்றில் இடுப்புக்கு மேற்பட்ட பகுதி வெறும் மேனியாகக் காணப்படுகின்றது. சில பெண் உருவங்கள் உடல் ஊடுருவித் தெரியும் மெல்லிய இறவுக்கையுடன் காணப்படுகின்றன. இவர்களின் இடுப்புக்குக் கீழ்பட்ட பகுதி ஆடை பல கோல வடிவ மடிப்புக்களைக் கொண்டுள்ளது. கழுத்து, காதுகள், தலை என்பன ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள விதத்தில் அவ்வுருவங்கள் வரையப்பட்டுள்ளமை ஒரு சிறப்பம்சமாகும். அத்துடன் தலையில் அணியப்பட்டுள்ள ஆபரணங்கள் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றன.

இரேகை, வர்ணப் பயன்பாடு

சிகிரியா ஓவியங்களில் உபயோகிக்கப்பட்டுள்ள வர்ணங்கள் தற்போதும் கூடப் பிரகாசமாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பிட்ட சில வர்ணங்கள் மட்டுமே உபயோகிக்கப்பட்டுள்ளன. அதாவது சிவப்பு, மஞ்சள், நீலம், கபிலம் ஆகிய வர்ணங்கள் அதிகளவில் உபயோகிக்கப்பட்டுள்ளன. வெள்ளையும் கறுப்பும் மிகக் குறைந்த அளவிலேயே உபயோகிக்கப்பட்டுள்ளன. இவ்வர்ணங்கள் இயற்கையான கனிப்பொருட்களைக் கொண்டே ஆக்கப்பட்டுள்ளன. ‘லபிஸ்லசுலி’ எனப்படும் கனிப்பொருளை உபயோகித்து நீலம், பச்சை வர்ணங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வர்ணக் கனிப்பொருள் ஆப்கானிஸ்தானின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த பதக்ஷான் (Badakshan) எனும் பிரதேசத்தில் இருந்து தருவிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.

உருவங்களைச் சூழக் காணப்படும் இரேகைகள் துரிதத்துடனும் இலயத்துடனும் பிரயோகிக்கப்பட்டுள்ளன. வெளிப்புற இரேகைகள் சில ஒன்றன் மீது ஒன்று வரையப்பட்ட தன்மையைக் காணமுடிகின்றது. இதனால் உருவங்களின் முப்பரிமாணத்தன்மை, பருமன் என்பன குறுகிய கோடுகள் பயன்படுத்த முடியாமையையும் காணமுடிகின்றது. ஒட்டுமொத்தத்தில் சிகிரியா ஓவியக் கலைஞன் இரேகைகளின் தன்மையை உபயோகித்து முப்பரிமாணத் தன்மை, நெகிழ்தன்மை, பருமன் என்பவற்றைத் துல்லியமாகக் காண்பித்துள்ளார். திரண்ட தோள்களையும் மார்பகங்களையும் காண்பிக்க சிவப்பு வர்ணத்திலான வளைவான இரேகைகளை (தூரிகைப்பூச்சு) உபயோகித்துள்ளார். இலங்கைச் சுவரோவியங்களில் துரிதமான இரேகைகள் காத்திரமான தன்மையுடன் உபயோகிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பமாக சிகிரியா ஓவியங்களில் உள்ள இரேகைகளைக் குறிப்பிடலாம்.

பாவ வெளிப்பாடு

கை முத்திரை
பல்வேறு பாவனைகளுடனான முகங்கள்
பல்வேறு பாவனைகளுடனான முகங்கள்

ஒவ்வோர் உருவிலும் அதற்கேயுரிய பாவவெளிப்பாட்டுப் பண்புகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கைகள், கைவிரல்களின் முத்திரைகள் வெவ்வேறுபட்டவை; உடல்நிலை வெளிப்பாடுகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட தன்மையைக் கொண்டிருக்கின்றன. பெரும்பாலான தனி மற்றும் சோடி பெண் உருவங்கள் மிக உணர்வுபூர்வமான பார்வையுடன் பூக்கள் அல்லது பூந் தட்டுக்களைக் கையிலேந்திய வண்ணமுள்ளனர். பெரும்பாலான உருவங்களின் பார்வை கீழ்நோக்கியதாக காட்டப்பட்டுள்ளது. மேல்நோக்கிய பார்வையுடன் உயர்த்திய புருவங்களுடன் காணப்படும் ஒரு பெண் உருவம் உள்ளது. கீழ்ப்பட்ட பகுதி காண்பிக்கப்படாத போதிலும் மங்கையர்களின் நெகிழ்வான தன்மை மிகவும் கவர்ச்சிகர மாக வரையப்பட்டுள்ளது. நீண்ட கண்கள், கூரிய மூக்கு, மெல்லிய கழுத்து, நீண்ட விரல்கள், பூரித்த மார்பகங்கள், மெல்லிய இடை, அகன்ற இடுப்பு ஆகியன மூலம் பெண் உடலின் சிருங்காரம் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சிகிரியா ஓவியங்கள் தொடர்பாக அறிஞர்களின் கருத்துக்கள்

எச். சீ. பி. பெல்

மன்னன் காசியப்பனின் அரசமாளிகையில் இருந்த அரசிகள், அரசகுமாரிகள், தோழியர்கள் ஆகியோரே சிகிரியா ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளனர் என பெல் கூறுகின்றார். அரச மாதர்கள் பொன்னிறத்தினாலும் தோழியர்கள் கறுப்பு நிறத்தினாலும் காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். மேலும் வடக்குத் திசையில் உள்ள பிதுரங்கலை விகாரையை வழிபடச் செல்வதற்காகக் கையில் மலர்களை ஏந்தியுள்ளனர் எனவும் அவர் வாதிடுகிறார். இங்கு காட்டப்பட்டுள்ள சகல மாதர்களும் வடக்குத் திசையில் பெயர்வது போன்று காட்டப்பட்டிருத்தல், கைகளில் மலர்கள் ஏந்தியிருத்தல் ஆகிய விடயங்களை அவர் இதற்கான காரணங்களாக எடுத்துக் காட்டுகிறார்.

மாட்டின் விக்ரமசிங்ஹ

சிகிரியா மாதர் உருவங்கள் மூலம் மன்னன் காசியப்பனின் அந்தப்புரப் பெண்கள் காட்டப்படுவதாக மாட்டின் விக்கிரமசிங்ஹ குறிப்பிடுகின்றார். இடைக்குக் கீழே இருப்பது முகில் அல்லது நீர் என்பது அவரது கருத்தாகும். அதற்கமைய பூங்காவில் களிப்புற்றிருந்த பின்னர் நீராடுவதற்காக நீரில் இறங்கும் அந்தப்புர மாதர்களின் உருவங்களே இந்த ஓவியங்களுக்கு விடயப் பொருளாக அமைந்துள்ளது என அவர் கூறுகின்றார். அரச மாதர்கள் பூங்காவில் களிப்புற்றிருந்த பின்னர் நீராடுவர் எனும் இலக்கியச் சான்று மற்றும் அவற்றுள் ஓர் உருவத்தின் கீழ் நீரலை போன்ற கோடுகள் காணப்படுகின்றமை ஆகியவற்றைக் கொண்டே அவர் இக்கருத்தை முன்வைக்கின்றார்.

ஆனந்த குமாரசுவாமி

இம்மாது உருவங்கள் தேவகன்னியர்களாவர் எனவும், தெய்வீக மாதர்களை முகங்கள் மீது வரைதலானது நன்கு நிலைபேறடைந்த ஒரு தென்னிந்திய மரபின் பிரபல்யம் வாய்ந்த ஒரு பிரயோகம் ஆகும் எனவும் ஆனந்த குமாரசுவாமி கூறுகின்றார். எல்லா மாதர் உருவங்களிலும் இடைக்குக் கீழான பகுதி முகில்களால் மறைக்கப்பட்டிருத்தல், அவர்கள் கைகளில் மலர்கள் ஏந்தியவாறு காட்டிப்பட்டிருத்தல் ஆகிய விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இம்மாதர்கள் தேவகன்னியர்கள் ஆவர் என அவர் கூறுகின்றார்.

அபய ஹேவாவசம்

சிகிரியா மாதர் உருவங்கள் மூலம் மன்னன் காசியப்பனின் புதல்விகளாகிய போதி, உத்பலவன்னா ஆகியோர் காட்டப்படுவதாக அபய ஹேவாவசம் கூறுகின்றார்.

ராஜா த சில்வா, கௌரிபாலா

வெவ்வேறு வேடங்களில் தோன்றி நிற்கும் தாரா தேவியின் உருவங்களே சிகிரியா ஓவியங்களில் காட்டப்பட்டுள்ளன என்பது இந்த இரண்டு கலை விமர்சகர்களதும் கருத்தாகும்.

செனரத் பரணவித்தான

சிகிரியாத் திட்டம் மற்றும் மன்னன் காசியப்பனின் சரிதம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே செனரத் பரணவித்தான சிகிரியா ஓவியங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ளார். மன்னர் காசியப்பன் ஒரு தெய்வ அரசனாக, குபேரன் எனும் எண்ணக்கருவுக்கமைய அரசாட்சி செய்ததாக வம்சக் கதைகளில் இடம் பெற்றுள்ளது. குபேரன் செல்வத்துக்கும் அதிகாரத்துக்கும் அதிபதி ஆவான். அவனது வாசத்தலம் ‘ஆலக்கமந்தாவ’ ஆகும். இந்த எண்ணக்கருவை சிகிரியா மற்றும் மன்னன் காசியப்பன் தொடர்பாக உறுதிப்படுத்து வதற்காக பரணவித்தான பின்வரும் விடயங்களைப் பயன்படுத்தியுள்ளார்.

  1. சூலவமிசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் காசியப்பன் சிகிரியா கற்குன்றின் உச்சியில் இரண்டாவது ‘ஆலக்கமந்தாவ’ போன்ற அழகிய மனங்கவர் மாளிகை யொன்றினை அமைத்து அங்கு குபேரன் போன்று வாழ்ந்தான் எனும் செய்தி.
  2. சிகிரியாவில் காணப்படும் இடிபாடுகளின் பண்புகளின்படி, அது தனியே யுத்தத்துக்காகவும் பாதுகாப்புக்குமாக ஒரு கோட்டையாக அமைக்கப்படாமை.
  3. மானசவிலவுக்கு (மானச குளத்துக்கு) வடக்கே ‘ஆலக்கமந்தாவ’ அமைந்துள்ளது போன்று சிகிரியாக் குளத்துக்கு வடக்கே சிகிரியாக்குன்று அமைந்திருத்தல்.
  4. கற்குன்று அரசு எனும் எண்ணக்கரு தென்னிந்திய நாடுகளில் பிரபல்யம் பெற்றுக் காணப்படுகின்றமை.
  5. காசியப்பன் சில கல்லேடுகளில் ‘ஆலகமதி’ என அதாவது மழைக்கு அதிபதி என தம்மை அறிமுகஞ் செய்திருத்தல்.

மேற்படி விடயங்களை அடிப்படையாகக் கொண்டு சிகிரியா மங்கையர்கள் குபேரனின் பெண்பிள்ளைகளாகிய மேகலதா (முகில்), விஜ்ஜுலதா (மின்னல்) ஆகியோரைக் குறிப்பதாக பரணவித்தான இனங்காட்டுகிறார்.

“ஆலக்கமந்தாவ” நிதமும் மேகத்தையும் மின்னலையும் கொண்டிருக்கும். அந்த அர்த்தத் தைத் தரும் வகையில் சிகிரியாக் குன்றாவது குபேரனின் ஆலக்கமந்தாவ எனவும், மங்கையர் உருவங்கள் குபேரனின் பெண்பிள்ளைகளாகிய மேகலதா, விஜ்ஜுலதா (முகில், மின்னல்) ஆவர் எனவும் குறியீட்டு ரீதியில் காட்டப்பட்டுள்ளதாக பரணவித்தான எடுத்துக் காட்டுகிறார். குறிப்பாக நீல நிற மாது மேகத்தையும், பொன்னிற மாது மின்னலையும் குறிக்கின்றமையையும் அவர் எடுத்துக் காட்டுகிறார். இதன் மூலம் குறியீட்டு ரீதியில் மின்னலும் முகிலும் தோன்றும் இடத்தில் வசிப்பவருக்கு மழையைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உண்டு எனக் கருத்து வெளிப்படுத்தப்படுவதாக பரணவித்தான கூறுகிறார். மேலும் பொதுமக்களின் ஆட்சியாளருக்கு அவ்வாறான ஓர் அரசியல் கருத்தைக் காட்டுதல் முக்கியமானது எனவும் பரணவித்தான எடுத்துக் காட்டியுள்ளார். சிகிரியா மற்றும் சிகிரிய ஓவியங்கள் தொடர்பாகப் பெரிதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள கருத்து இதுவாகும்.

error: Content is protected !!