சோமஸ்கந்தமூர்த்தி

சிவபெருமானும் அவரது சக்தியாகிய உமாதேவியும் தீச்சுடர்களாலான ஒளிவட்டத்தினால் சூழப்பட்ட ஓர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் நிலையே சோமஸ்கந்தர் சிலையினால் காட்டப்பட்டுள்ளது. பொலனறுவை 5 ஆம் இலக்க சிவாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இச்சிலை கி.பி. 12 ஆம் நூற்றாண்டை அதாவது பொலனறுவைக் காலத்தைச் சேர்ந்தது. நான்கு பகுதிகளாக உருவாக்கப்பட்டுள்ள இச்சிற்பம் திண்ம வார்ப்பு முறையில் ஆக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்பகுதி பொள்ளாலானது.

இங்கு காட்டப்பட்டுள்ள உமாதேவிச் சிலை 1908 இல் எச்.சீ.பி. பெல் அவர்களால் பொலனறுவை 5ஆம் இலக்க் ஆலயத்திலிருந்து கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் அது, கொழும்பு தேசிய அரும்பொருட் காட்சியகத்தில் வைக்கப்பட்டது. அதிலிருந்து 53 ஆண்டுக்ள கழிந்த பின்னர், தொல்பொருளியல் திணைக்களத்தைச் சேர்ந்த கலாநிதி சாள்ஸ் கொடக்கும்புற அவர்களால் கி.பி. 1960 ஆம் ஆண்டில் அதே சிவ ஆலயப் பிரதேசத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வின்போது சிவ பெருமானின் உருவம் உட்பட ஆசனமும் கண்டுபிடிக்கப்பட்டது. அப்பகுதிகள் முதலில் அனுராதபுர அரும்பொருட்காட்சியகத்தில் வைக்கப்பட்டன. கொழும்பு மற்றும் அனுராதபுர அரும்பொருட்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருந்த இச்சிற்பப் பகுதிகள் ஒரே சிற்பத்தொகுதியைச் சேர்ந்தவை என்பது, திரு. சிரிநிமல் லக்துசிங்க அவர்களால் 1980 இல் இனங்காணப்பட்டது,

சோமஸ்கந்தர் சிலையானது சிவபெருமானும் அவரது சக்தியாகிய உமாதேவியும் தீச்சுடர் கொண்ட ஒளிவட்டமொன்றினால் சூழப்பட்ட ஆசனமொன்றில் அமர்ந்திருப்பதைக் காட்டுகின்றது. தமிழில் இவ்வொளிவட்டம் ”திருவாசி” என அழைக்கப்படும். சிவபெருமான் இடது காலை கீழ்நோக்கி நீட்டி, வலது காலை ஆசனத்தின்மீது மடித்து வைத்து லலிதாசனப் பாங்கில் அமர்ந்துள்ளார். முன்புறம் நோக்கிய நிலையில் அமைந்துள்ள இச்சிலையில் நான்கு கைகள் உள்ளன. அவற்றுள், வலது புறத்தே மேலே உள்ள கையில் கோடாரியும், இடது புறத்தே மேலே உள்ள கையில் மான் மிருக உருவமும் உள்ளன. வலது புறத்தே கீழே உள்ள கையினால் ‘அபய முத்திரையும் இடது புறத்தே கீழே உள்ள கையினால் ‘வரத’ முத்திரையும் காட்டப்பட்டுள்ளன. உமாதேவி உரு சற்றுச்சாய்வாக சிவபெருமானை நோக்கியவாறு ஆசனத்தில் அமர்த்தப்பட்டுள்ளது. உமாதேவி வலது காலை முழங்காலில் மடித்து ஆசனத்தின் மீது வைத்து இடது காலைக்கீழ் நோக்கி நீட்டி, லலிதாசனப் பாங்கில் அமர்ந்திருக்கும் நிலை காட்டப்பட்டுள்ளது. உமாதேவியின் வலது கையில் தாமரை மொட்டு உள்ளது. இடது கையினால் ‘வரத முத்திரை காட்டப்பட்டுள்ளது. இந்த இரண்டு சிலைகளும் வளையங்கள் மூலம் ஆசனத்துடன் பொருத்தப்பட்டுள்ளன. அசாதாரணமான சில அம்சங்கள் இந்தப் படைப்பாக்கத் தொகுதியில் காணப்படுகின்றமையால் இது மரபுரீதியான தென்னிந்திய விக்கிரகப் பண்புகளை மீறிச் சென்று, அவற்றிலிருந்து வேறுபட்ட பண்புகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்ட அதாவது இலங்கையில் ஆக்கப்பட்ட ஒரு கலைப்படைப்பாக இனங்காணப்பட்டுள்ளது.

error: Content is protected !!