முல்கிரிகலை விகாரை ஓவியங்கள்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பெலி அத்தை நகரில் இருந்து ஹக்மனை நகரம் நோக்கிச் செல்லும் பாதையில் முல்கிரிகலை ரஜமகா விகாரை அமைந்துள்ளது. கல்வெட்டு மூலாதாரங்களின்படி, முல்கிரிகலை விகாரை கி.மு. 2 ஆம் நூற்றாண்டு வரையிலான நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. முல்கிரிகலை விகாரை முகுந்தகிரி” விகாரை எனவும் அழைக்கப்படுகின்றது. வமிசக் கதைகளின்படி முல்கிரிகலை விகாரை கி.பி. 3 ஆம் நூற்றாண்டில்

முதலாம் ஜெட்டதிஸ்ஸ மன்னனால் கட்டுவிக்கப் பட்டுள்ளது. கண்டியை ஆண்ட நரேந்திரசிங்கன், கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன் போன்ற மன்னர்களின் அனுசரணையுடன் இந்த விகாரை வளர்ச்சியடைந்துள்ளது. விகாரையின் உட்புறத்தே காணப்படும் ஓவியங்கள் 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவையாகும்.

முல்கிரிகலை விகாரையில் ரஜமகாவிகாரை, பதும ரகத் விகாரை ஆகிய இரண்டு குகைகளில் தென்பிரதேச மரபைச் சேர்ந்த ஓவியங்கள் உள்ளன. இந்த ஓவியங்களின் விடயப் பொருள்களாக ஜாதகக் கதைகள், இருபத்து நான்கு (சூவிசி) புத்தர்கள், புத்தர் பெருமானின் வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்கள், தெய்வங்களின் உருவங்கள் போன்றவை அடங்கியுள்ளன. சாதகக் கதைகளுள், தேவபத்த சாதகம், வெஸ்ஸந்தர சாதகம், சிவி சாதகம் ஆகியன முதன்மையிடம் பெற்றுள்ளன. இந்த பண்டைய ஜாதகக் கதை ஓவியங்கள், ரஜமகா விகாரையினுள் காணப்படுகின்றன. எனினும் தேவ பக்த ஜாதகக் கதையானது பதும ரகத் விகாரை, ரஜமகா விகாரை ஆகிய இரண்டிலும் காணப்படுகின்றது.

தென்பிரதேச மரபைச் சேர்ந்த ஓவியக்கலை பாணியைச் சார்ந்த ஓவியங்களுள் பதும ரகத் குகையினுள் உள்ள தேவபத்தை ஜாதகக் கதை ஓவியமானது தெகிவளை கரகம்பிட்டிய மற்றும் கத்தலுவை பூர்வாராமை விகாரை ஓவியங்களின் ஓவிய இலக்கணங்களுக்கு ஒப்பானவை. தேவபத்தை ஜாதகக் கதை மத்திய கண்டியக் கால ஓவியங்களில் அடங்கியிராத, எனினும் தென்பிரதேச ஓவியங்களுக்கு மாத்திரம் தனித்துவமான ஒரு கதையாகும். உருவம், ஒலி, மணம், சுவை, தொடுகை (ஸ்பரசம்) ஆகிய ஐம்புலன்களால் இன்பந் தூய்க்க முற்பட்டமையால் வாழ்க்கை அழிதல் மற்றும் அதற்கு எதிராகச் செயற்படுவதன் மூலம் வாழ்க்கை பற்றிய விளக்கமும் வெற்றியும் கிடைத்தல் பற்றியே இந்த சாதகக் கதையின் மூலம் வலியுறுத்தப்படுகின்றது. குடியேற்றவாதத்தை நேரடியாக எதிர்கொண்ட ஒரு பிரதேசத்தில் ஏற்பட்ட பண்பாட்டு மாற்றங்களின் தன்மையை இனங்காண்பதற்கு இந்தச் சாதகக் கதை சித்திரிக்கப்பட்டுள்ள விதம் துணையாகின்றது.

தேவபத்தை ஜாதகக் கதையின் மூலம் ஐரோப்பியப் பண்பாட்டு இயல்புகள், சுதேச பண்பாட்டுடன் கலந்த விதம் முன்வைக்கப்பட்டுள்ளது. தொடர் ஓவியங்களாக குறித்த சாதகக் கதையை வரையும்போது மனித, பிராணி மற்றும் கட்டடங்கள் போன்றவற்றின் அளவுப் பிரமாண இயல்புகள் தொடர்பான விளக்கத்துடன் வரைய முயற்சி செய்யப்பட்டுள்ளமையை தேவபத்தை சாதகக் கதை ஓவியங்கள் மூலம் இனங்காண முடிகின்றது. மனித உருவத்தின் வடிவங்கள் மிக உயிரோட்டமான வகையில் காட்டப்பட்டுள்ளதோடு, அந்தந்தப் பாத்திரத்துக்கமைய உடல்நிலைகளும் இயக்கத்தன்மையும் உயிரோட்டமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

தென்பிரதேச ஓவியக் கலையின்போது இயற்கைச் சூழலைக் (பிராணிகள், மரஞ்செடி கொடிகள்) காட்டுவதற்காக ஓவியர் அவற்றின் தனித்துவம் தெளிவாக வெளிக்காட்டப்படும் வகையில் வரைய முயற்சி செய்துள்ளார். இயற்கை உலகில் காணப்படும் பனை மரம், சண்பக மரம் ஆகியன மிகத் தத்ரூபமாக வரையப்பட்டுள்ளன. மரங்களின் கிளைகள், சிறிய இலைகள், இலைகள், காய்கள், மலர்கள் போன்றவற்றையெல்லாம் சித்திரிப்பதில் ஓவியர் வெற்றி கண்டுள்ளார்.

சிவி சாதகக் கதை
சிவி சாதகக் கதை

யானை, குதிரை போன்ற பிராணி உருவங்களையும் ஒற்றை மாடி, இரட்டை மாடிக் கட்டடங்களையும் இயற்கைத் தன்மையுடன் கட்டியெழுப்ப முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஓவியத் தளத்தின் மீது உருவங்கள் வரையும்போது குடியேற்றவாத ஆட்சிப் பிரதேசத்துக்கேயுரிய (தெற்குப் பிரதேசத்துக்கேயுரிய) தளபாடங்கள், கட்டட மாதிரிகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதன் மூலம் அப்போது காணப்பட்ட சமூகப் பின்னணியை ஓவியர், ஓவியம் மூலம் காட்ட முயற்சித்துள்ளார். மனித உருவங்களில் ஆடையணிகள், ஆபரணங்கள் போன்றவை பெரிதும் அலங்காரமான வகையில் சித்திரிக்கப்பட்டுள்ளது.

சிவி சாதகக் கதை

தாழ் நாட்டு ஓவியர் விகாரை ஓவியங்களின் தளத்தை மிகச் சிக்கலான. மிக ஒழுங்கமைத்த வெளியிலேயே பயன்படுத்தியுள்ளார். மத்தியக் கண்டிய ஓவியர் போன்று எளிமையான ஓவியத்தை அவர் ஆக்கவில்லை . தொடர் முறையில் ஓவியங்களைச் சுவரில் கூறுகளாகப் பிரித்துக் கொள்ளும் ஓவியர் கதைக்குரிய நிகழ்வினைத் தளத்தின் மீது கட்டியெழுப்பியுள்ளார். கதைக்குரிய வெவ்வேறு நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் போது சமனிலையைப் பேணுவதற்கான உத்தியாக இயற்கை உலகின் மரஞ்செடி கொடிகள், பறவைகள், மலர், அலங்கார வேலைப்பாடுகள், தளபாடங்கள், பாவனைப் பொருள்கள் போன்றவற்றை ஓவியத்தில் உள்ளடக்கியுள்ளார்.

சிவி சாதகக் கதை

முல்கிரிகலை பதுமரகத் விகாரை ஓவியங்களை வரையும்போது ஓவியர் மிகப் பிரகாசமான வர்ணங்களைப் பயன்படுத்தியுள்ளார். வரைந்துள்ள உருவங்களுக்காகச் சிவப்பு, வெள்ளை, நீலம், பச்சை, கறுப்பு, மஞ்சள் போன்ற வர்ணங்களைப் பயன்படுத்தியுள்ளதோடு, பின்னணியைப் பூர்த்தி செய்வதற்காகச் சிவப்பு நிறத்தையும், மனையின் உட்பகுதிக்காகக் கறுப்பு அல்லது நீல வர்ணத்தையும் பயன்படுத்தியுள்ளார். மனித உருவங்களுக்காக மஞ்சள் நிறம் சார்ந்த வர்ணம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மரத்தண்டுகளுக்கு நிறந்தீட்டுவதற்காக வெள்ளை நிறத்தைப் பயன்படுத்தியுள்ளமை ஒரு சிறப்பியல்பாகும். மனித உருவங்களின் ஆடையணிகளை பன்னிறத்தில் வர்ணந் தீட்டியுள்ளார். ஆடையணிகளை வரைவதற்காக இரேகைப் பயன்பாட்டின்போது மிக நுணுக்கமான அலங்காரக் காட்டுருக்களை உருவாக்கக் கலைஞர் முயற்சி செய்துள்ளார்.

error: Content is protected !!