லங்காதிலக்க விக்கிரக மனை

மகா பராக்கிரமபாகு மன்னரால் கட்டுவிக்கப்பட்ட லங்காதிலக்க சிலை மனையானது, தூபாராாமைக்குப் பின்னர் நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது சிலை மனையாகக் கருதப்படுகின்றது. இந்த சிலை மனை, பொலனறுவையில் காணப்படுபவற்றுள் மிகப் பெரியதாகும். இவ்விக்கிரக மனை அமைக்கப்பட்டுள்ள கூடம் 186 அடி நீளமும் 108 அடி அகலமுடையது. இக்கூடத்தைச் சூழ ஒரு மதில் காணப்பட்டமைக் கான சான்றுகள் உள்ளன. இக்கூடத்தின் மீது அமைந்துள்ள விக்கிரகமனை 124 அடி நீளமும் 66 அடி அகலமுமுடையது. தற்போது காணப்படுவதற்கிணங்க அதன் உயரம் 58 அடி ஆகும். ஆரம்பத்தில் இது இதனிலும் இரண்டு மடங்குகளுக்கு மேற்பட்ட உயரத்தைக் கொண்டதாக இருந்திருக்க இடமுண்டு என்பதை அதன் கட்டடக்கலைப் பண்புகள் மூலம் அனுமானிக்க முடிகின்றது.

லங்காதிலக்க சிலை மனையின் கட்டடக்கலைத் திட்டமானது தூபாராமை சிலை மனையின் கிடைத்திட்டத்தை அதாவது, அந்தராழம், விறாந்தை. உள் மனை ஆகிய பகுதிகளைப் பொறுத்தமட்டில் ஒப்பான தன்மையுடையதாயினும் லங்காதிலக்க சிலை மனையின் திட்ட எண்ணக்கரு மிக உயர்வான தன்மையைக் கொண்டுள்ளமையைக் காணமுடிகின்றது. தூபாராமை சிலை மனை தியான நிலைப் புத்தர் சிற்பத்தை வைப்பதற்காகவே அமைக்கப்பட்டுள்ளது. எனினும் லங்காதிலக்க சிலை மனையானது நின்ற நிலைப் புத்தர் சிற்பத்தை வைப்பதற்காகவே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அப்புத்தர்சிலை 40 அடிக்கு மேற்பட்ட உயரமுடையது. கர்ப்பக் கிரகத்தினுள் வைக்கப்பட்ட இப்பாரிய புத்தர் சிற்பத்தை புறத்தே இருந்து பார்க்கத்தக்கதாக பாரிய அளவுடைய வாசலொன்றும் அமைக்கப் பட்டிருந்தது. இந்நுழைவாயினதும் சிலையினதும் மேற்பகுதிகள் சிதைவடைந்துள்ளன. எனினும் தற்போது மீதியாக இருக்கும் பகுதிகளைக் கொண்டு அந்நுழைவாயினதும் புத்தர் சிற்பத்தினதும் உயரத்தை அனுமானிக்க முடிகிறது.)

லங்காதிலக்க சிலை மனையில் கர்ப்பக்கிரகத்தைச் சூழ விக்கிரகத்தை வலம்வருவதற்காக 4 அடி 6 அங்குல அகலமான பிரதட்சணைப் பாதை அமைக்கப்பட்டுள்ளது. தூபாராமையில் இது காணப்படவில்லை. விக்கிரகமனையின் மேற்பகுதி தற்போது காணப்படாத போதிலும், சதுரவடிவ கர்ப்பக்கிரகத்துக்கு மேலே குவிவான கூரை காணப்பட்டதாக அனுமானிக்கப்படுகின்றது. ஏறத்தாழ 55 அடி உயரமான இக்கட்டிடத்தின் கூரை, மரத்தினால் அமைக்கப்பட்டிருந்ததாக அனுமானிக்கப் படுகின்றது. சிலை மனையின் பிரதான நுழைவாயில் தவிர்ந்தவிடத்து, ஏனைய சிலை மனைகளினைப் போன்றே, விறாந்தை பிரவேசிப்பதற்கான ஒரு சிறிய நுழைவாயில் வடக்குப் புறத்திசைச் சுவரில் காணப்பட்டுள்ளது.

லங்காதிலக்க சிலை மனையின் உட்புறத்தே, கர்ப்பக்கிரகத்தின் ஒரு பகுதியில், இடைக்கழிகூடத்தின் மட்டத்தைவிட உயரமான சதுரவடிவ கற்றூண்கள் நடப்பட்டுள்ளன. ஒரு புறத்தே 17 தூண்கள் வீதம் இருபுறங்களிலும் மொத்தம் 34 கற்றூண்கள் உள்ளன. இத்தூண்கள் விசேட வடிவத்தில் அமைக்கப்பட்ட செங்கல்லினால் ஆனவை. அத்தூண்கள் மீது மரத்தாலான ஒரு மாடி நிர்மாணிக்கப்பட்டிருந்ததாகவும் அனுமானிக்கப்படுகின்றது. இம்மண்டபத்தின் இரு புறங்களிலும் சுவருக்கு அருகே மேலே ஏறிச் செல்வதற்காக ஒடுங்கிய இரண்டு படிக்கட்டு வரிசைகள் அமைந்துள்ளன. உள் மனைக்கு ஒளியூட்டம் பெறுவதற்காகச் சுவரின் மேற்பகுதியில் துவாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விகாரையின் நுழைவாயில் கம்பீரத்தோற்றமுடையது. நுழைவாயிலின் இருபுறத்திலும் பல்கோணி வடிவத்திலான இரண்டு தூண்கள் உள்ளன. அத்தூண்கள் மீது பாரிய தெய்வ உருவங்களும் காணப்பட்டுள்ளமைக்குச் சான்றுகள் உள்ளன.

‘லங்காதிலக்க இனது வெளிப்புறச் சுவர்களை அரைப்புடைப்புத் தூண்கள் மூலம் வேறாக்கி, விமானங்கள் அமைக்கப்பட்டு அவற்றினுள் செங்கல்லினாலும் மென்மையான ஈரச் சாந்தினாலும் அரைப்புடைப்பு முறையில் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டு, செதுக்கு வெலைப்பாடுகள் மூலம் அழகுபடுத்தப்பட்டுள்ளது. சிலை மனை அத்திவாரம் ‘சிங்க உருவங்களாலும் வாமன (குள்ளர்) உருவங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த அலங்கார அமைப்புக்களை உருவாக்குவதற்காக மென்மையான சுண்ணச் சாந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. விகாரையின் உட்புறம் அழகிய ஓவியங்களால் அழகுபடுத்தப்பட்டிருந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. நுழைவாயிலின் கைப்பிடிக் கல்லானது (செட்டைக்கல்) இலங்கையின் கைப்பிடிக்கற்களுள் சிறப்பிடம் பெறும் ஓர் படைப்பாக்கமாகக் கருதப்படுகின்றது. அதற்கான காரணங்கள் அதில் பெண் திக்குப் பாலகர் உருவங்களும் பைரவர் உருவங்களும் காணப்படுகின்றமையாகும்.

error: Content is protected !!